நாவாய் ஒப்பந்தம் - II


"என்ன செய்தீர்கள் அதன் பின்?" என்று வினவினார் ஹோம்ஸ்.

"பக்கவாட்டுப் படிகளின் வழியாகத் தான் திருடன் வந்திருக்க வேண்டும் என்பதை நொடியில் உணர்ந்தேன். முன் பக்க படிகளில் அவன் வந்திருந்தால் நான் கீழே இறங்கும் போது அவனை எதிர்கொண்டிருப்பேனே!"

"உங்கள் அறையிலோ அல்லது வெளியே உள்ள பாதையிலோ அவன் ஒளிந்திருக்கவில்லை என்று நிச்சயமாய் நம்புகிறீர்களா?"

"நிச்சயமாக, மிஸ்டர். ஹோம்ஸ். ஒரு எலி ஒளிவதற்குக் கூட வழியில்லை இரண்டு இடங்களிலும்".

"நன்றி. சொல்லுங்கள் அடுத்து என்ன செய்தீர்கள்?"

"என் பதட்டத்தைப் பார்த்த உதவியாளர் என்னைப் பின் தொடர்ந்து மேலே இருந்த என் அறைக்கு வந்தார். நடந்ததை உணர்ந்ததும் இருவரும் பக்கவாட்டுப் படிகளில் இறங்கி ஓடினோம். சார்ல்ஸ் தெருவிற்குப் போகும் அந்த பக்கவாட்டுக் கதவு சாத்தியிருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை. அதைத் திறந்து கொண்டு இருவரும் தெருவிற்கு ஓடினோம். அருகிலிருந்தக் கடிகாரத்திலிருந்து மூன்று முறை மணி ஒலித்தது, இரவு ஒன்பதே முக்கால் மணியைக் குறிக்கும் விதமாக".

"இது குறிக்கப்படவேண்டியது", என்று சொன்ன ஹோம்ஸ், தனது சட்டைக் கையின் முகப்பில் அதை எழுதிக் கொண்டார்.

"அன்று பெய்துகொண்டிருந்த மழையால் இரவு மிகவும் இருட்டானதாக இருந்தது. நாங்கள் நுழைந்த சார்ல்ஸ் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. ஆனால் அதன் மறுமுனையில் இருந்த வொயிட்ஹாலில் (Whitehall) போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. மழையில் நனைந்துகொண்டே நாங்கள் சார்ல்ஸ் தெருவின் பிளாட்பாரத்தில் ஓடினோம். தெருவின் முடிவில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.

'ஒரு திருட்டு நடந்துள்ளது', என்று அவரிடம் மூச்சு வாங்கக் கூறினேன். 'வெளியுறவுத் துறையிலிருந்து ஒரு விலைமதிப்பில்லா ஆவணம் களவாடப்பட்டுள்ளது. யாரேனும் இந்தப் பக்கம் வந்தார்களா?' என்று கேட்டேன்.

'பதினைந்து நிமிடங்களாக நான் இங்கே தான் நின்று கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு நடுத்தர வயது பெண்மணி சால்வை போர்த்தியபடி சென்றார். வேறு யாரும் செல்லவில்லை', என்றார்.

உடனே உதவியாளர், 'அது என் மனைவி. வேறு யாரும் வந்தார்களா?' என்றார்.

'இல்லை'.

'சார், அப்படியென்றால் திருடன் மறுபக்கம் தான் போயிருக்கவேண்டும்', என்றார் என் சட்டையைப் பிடித்து மறுபக்கம் செல்வதற்கு இழுத்தபடி.

ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. மேலும் அவர் என்னை மாற்று திசையில் அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் அவர் மேல் எனக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுவதாக இருந்தன.

'அந்தப் பெண்மணி எந்தப் பக்கம் சென்றார்?' என்று நான் போலீஸ்காரரை வினவினேன்.

'தெரியவில்லை, சார். அவள் செல்வதைப் பார்த்தேன். குறிப்பிட்டு அவளைக் கண்காணிக்கத் தேவையில்லாததால் கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் ஏதோ அவசரத்தில் அவள் இருந்தது மட்டும் தெரிந்தது'.

'எவ்வளவு நேரம் இருக்கும் அவள் சென்று?'

'சில நிமிடங்கள் தான்'.

'கடந்த ஐந்து நிமிடங்களில்?'

'நிச்சயம் அதற்கு மேல் இருக்காது'.

'நேரத்தை தான் நீங்கள் வீணடிக்கிறீர்கள், பெல்ப்ஸ் சார்', என்று உதவியாளர் பதறினார். 'என் மனைவிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை நம்புங்கள். தெருவின் அந்தக் கோடிக்கு வாருங்கள்', என்று என்னை அழைத்தவர் பின் பொறுமை இழந்தவராய், 'நீங்கள் வரவில்லையென்றால் இருங்கள், நான் போகிறேன்', என்று மறுதிசையில் ஓட ஆரம்பித்தார்.

ஆனால் ஒரே எட்டில் நான் அவரைத் தாவிப் பிடித்து, 'உன் வீடு எங்கே?' என்று கேட்டேன்.

'நம்பர் 16, ஐவி லேன், ப்ரிக்ஸ்டன்', என்று சொன்ன அவர், 'இதில் போய் நீங்கள் திசைமாறி விடாதீர்கள், சார். தெருவின் அந்தக் கடைசிக்கு என்னுடன் வாருங்கள். ஏதாவது தகவல் கிடைக்கிறதாவென்று பார்ப்போம்', என்று மறுபடியும் என்னை அழைத்தார்.

அவர் சொன்னதை செய்வதில் எதுவும் குறைந்துவிடப்போவதில்லை என்பதால் போலீசையும் உடன் அழைத்துக்கொண்டு நாங்கள் மறுமுனைக்குச் சென்றோம். தெரு முழுவதும் போக்குவரத்து நிரம்பி இருக்க, நடந்து செல்பவர்கள் மழையில் இருந்து ஒதுங்க இடம் தேடி அவசரமாய் விரைந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் தகவல் கேட்பதற்கு அங்கே யாரும் இல்லை.

அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியாமல் திரும்பி அலுவலகத்திற்கே வந்தோம். படிக்கட்டுகளையும்  பாதைகளையும் நன்றாகத் தேடினோம். தரை ஒரு மங்கிய பழுப்பு நிறம். கால் தடங்கள் அதில் பளிச்சென்றுத் தெரியுமாதலால் அப்படி ஏதேனும் இருக்கிறதாவென்றுப் பார்த்தோம். எங்கேயும் எதுவுமில்லை".

"எப்போதிருந்து மழை பெய்யத் தொடங்கியது அன்று?" என்றார் ஹோம்ஸ்.

"மாலை சுமார் ஏழு மணியிலிருந்து".

"அப்படியென்றால் ஒன்பது மணியளவில் உள்ளே வந்த உதவியாளரின் மனைவியின் சகதி படிந்த செருப்புத் தடங்கள் எப்படித் தரையில் படாமல் போயின?"

"நீங்கள் கேட்டது போலவே எனக்கும் அன்று இந்தச் சந்தேகம் வந்தது, மிஸ்டர். ஹோம்ஸ். விசாரிக்கும் போதுத் தெரிந்தது, வேலையாட்கள் தங்கள் செருப்புகளை உதவியாளரின் இடத்தில் கழற்றி வைத்துவிட்டு அங்கிருக்கும் பிரத்யேகமான சுத்தமான செருப்புகளை அணிந்து கொண்டு வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்".

"அப்படியெனில் அதில் ஏதும் சந்தேகங்கள் இல்லை. மாலை முழுதும் மழை வெளியே பெய்தும் உள்ளே அதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை அல்லவா? இந்த சங்கிலித் தொடர் சம்பவங்கள் என் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அடுத்து என்ன செய்தீர்கள்?"

"அடுத்து நான் வேலை செய்துகொண்டிருந்த அறையையும் நாங்கள் சோதனையிட்டோம். ரகசியக் கதவு அல்லது தரையில் ரகசிய மறைவிடம் என்று எதற்கும் அங்கே வாய்ப்பில்லை. ஜன்னல்களும் கீழே தரையில் இருந்து முப்பதடி உயரத்தில் இருந்தன. மேற்கூரையும் சாதாரண சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஒன்று. திருடன் நிச்சயமாய்க் கதவின் வழியாகத்தான் நுழைந்திருக்க வேண்டும் என்று என் தலை மேல் அடித்துச் சத்தியம் செய்யவும் நான் தயாராயிருக்கிறேன், மிஸ்டர். ஹோம்ஸ்". 

"குளிர் காயும் கணப்பு இடத்தைப் பார்த்தீர்களா?"

"அங்கே அப்படி ஒன்று எதுவும் இல்லை. ஒரே ஒரு சிறிய ஸ்டவ் மட்டும் தான் இருக்கிறது. இழுக்கும் அழைப்பு மணி என் மேஜைக்கு சற்றே வலது பக்கத்தில் தொங்குகிறது. என் மேஜையைத் தாண்டி சென்றாலொழிய அந்த மணியை இழுக்க முடியாது. திருட வந்தவன் எதற்கு அழைப்பு மணியை ஒலிக்கவேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது".

"நிச்சயம் அது ஒரு விசித்திர நிகழ்வு தான். அடுத்து என்ன செய்தீர்கள்? அறையை சோதனையிட்டிருப்பீர்கள் அல்லவா, ஏதேனும் தடமோ, பொருளோ, சிகரெட் துண்டோ, முடியில் குத்தும் பின்னோ, கையுறையோ - ஏதாகிலும் இருக்கிறதாவென்று?"

"அப்படி எதுவும் இல்லை".

"ஏதாவது வாசனையை நுகர்ந்தீர்களா?"

"அதைப்பற்றி நாங்கள் யோசிக்கவில்லையே!"

"ஆஹ்! ஏதேனும் புகையிலையின் வாசனை தெரிந்திருந்தால் மிகவும் உபயோமானதாக இருந்திருக்கும்".

"நான் புகைப்பதில்லை, மிஸ்டர். ஹோம்ஸ். ஆகையால் அப்படி ஏதேனும் வாசனை இருந்திருந்தால் நிச்சயம் அது என் மனதில் பதிந்திருக்கும். எந்த ஒரு தடயமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர - உதவியாளரின் மனைவி, மிஸஸ். டான்ஜி (Mrs. Tangey) மிகவும் அவசரமாக அலுவலகத்திலிருந்து வெளியேறினார். உதவியாளர் மிஸ்டர். டான்ஜியால் எந்தவொரு திருப்தியான விளக்கமும் இதற்குத் தரமுடியவில்லை - அவர் மனைவி வழக்கமாக அந்த நேரத்திற்குத் தான் வீட்டிற்குச் செல்வார் என்பதைத் தவிர. ஒருவேளை ஒப்பந்தம் அவரிடம் இருந்தால் அவர் அதை ஏதாகிலும் செய்வதற்கு முன்பாக அந்தப் பெண்மணியை மடக்கிவிட வேண்டும் என்று போலீஸ்காரரும் நானும் நினைத்தோம்".

"ஸ்காட்லாண்ட் யார்டிற்குத் (Scotland Yard) தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதால் அங்கிருந்து டிடெக்டிவ் ஃபோர்ப்ஸ் (Forbes) வந்து சேர்ந்து கேஸை சார்ஜ் எடுத்துக்கொண்டார். உதவியாளர் தெரிவித்த அவருடைய வீட்டின் முகவரிக்கு ஒரு வண்டியமர்த்திக்கொண்டு அரை மணி நேரத்தில் சென்றடைந்தோம். கதவை அவருடைய மூத்த மகள் திறந்தார். தனது தாயார் இன்னும் வரவில்லை என்று அந்தப் பெண் சொன்னதால் அவர் வரும் வரை வீட்டிலேயே காத்திருக்க முடிவு செய்து முன்னறையில் அமர்ந்திருந்தோம்".

கதவை அவருடைய மூத்த மகள் திறந்தார் (Illustration by Martin Van Maële)

"ஒரு பத்து நிமிடங்கள் கழித்துக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இங்கே தான் ஒரு மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம், மிஸ்டர். ஹோம்ஸ். அதற்கு என்னைத் தான் நான் நொந்துகொள்ளவேண்டும். நாங்கள் சென்று கதவைத் திறப்பதற்கு பதில், அவருடைய மகளை கதவைத் திறக்க அனுமதித்து விட்டோம். கதவைத் திறந்த அந்தப் பெண், 'அம்மா, உங்களைப் பார்க்க யாரோ இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்', என்று சொல்லிவிட, தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது உடனே. டிடெக்டிவ் ஃபோர்ப்ஸ் முன்னறைக் கதவை உடனே திறக்க, ஓடிய சத்தம் வந்த திசையில் நாங்கள் பின் சென்றோம். அந்தப் பெண், மிஸஸ். டான்ஜி, பின்னறையோ சமையல்கட்டோ, அங்கே அடைந்துவிட்டிருந்தார் அதற்குள். அவர் முகத்தில் இருந்த அச்சம் ஆச்சர்யமாக மாறியது என்னைப் பார்த்ததும்.

 'ஹா! நீங்கள் அலுவலகத்து மிஸ்டர். பெல்ப்ஸ் அல்லவா!' என்றார் ஆச்சர்யத்துடன்".

'ஹா! நீங்கள் அலுவலகத்து மிஸ்டர். பெல்ப்ஸ் அல்லவா!' (Illustration by Sidney Paget in The Strand Magazine)

"பின்னே யாரென்று நினைத்தாயாம் எங்களிடம் இருந்துத் தப்பியோடும் போது?" என்று டிடெக்டிவ் ஃபோர்ப்ஸ் கேட்க, "கடன்காரர்கள் என்று நினைத்தேன்", என்றார் மிஸஸ். டான்ஜி.

"இந்தக் காரணம் இங்கே செல்லுபடியாகாது, மிஸஸ். டான்ஜி. வெளியறவுத் துறை அலுவலகத்திலிருந்து நீங்கள் மிக முக்கியமான ஆவணம் ஒன்றைத் திருடிவிட்டீர்கள் என்று உங்களை சந்தேகிக்கிறோம். உங்களை சோதனையிடவேண்டும். எங்களுடன் நீங்கள் ஸ்காட்லாண்ட் யார்ட் வரவேண்டும்", என்றார் டிடெக்டிவ் ஃபோர்ப்ஸ்.

"அந்தப் பெண்மணி எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் நாங்கள் விடுவதாயில்லை. ஒரு பெரிய வண்டியை வரவழைத்து நாங்கள் மூன்று பேரும் அதில் ஸ்காட்லாண்ட் யார்ட் சென்றோம். அதற்கு முன் சமையல் அறை அடுப்பில் எதையேனும் எரித்தத் தடம் இருக்கிறதாவென்று சோதனையிட்டோம், அந்த ஒப்பந்தத்தை எரித்திருப்பாரோ என்ற சந்தேகத்துடன். ஆனால் அடுப்பில் சாம்பலோ எதையும் எரித்தத் தடயமோ ஒரு துளியும் இல்லை. ஸ்காட்லாண்ட் யார்ட் சென்று பெண் போலீஸ் ஒருவர் அந்தப் பெண்மணியை சோதனையிடும் வரை முள் மேல் நிற்பது போல் காத்திருந்தேன். ஆனால் ஒப்பந்தம் அவரிடம் இல்லை.

அப்போது தான் நிலைமையின் முழு வீச்சும் எனக்கு உறைத்தது. அது வரையில் இங்கேயும் அங்கேயும் ஓடி, ஒப்பந்தத்தைத் தேடிக்கொண்டிருந்ததில் எதுவும் உறைக்கவில்லை எனக்கு. எப்படியும் அது கிடைத்துவிடும் என்ற நினைப்பில் இருந்ததால் ஒருவேளை அது கிடைக்காவிட்டால் என்னவாகும் என்பதை யோசிக்கக் கூட சமயமில்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்த போதுதான் நிலைமையின் முழு விபரீதம் புரியத்தொடங்கியது. 

"கொடுமையாய் இருந்தது, மிஸ்டர். ஹோம்ஸ். வாட்சனிடம் கேட்டுப்பாருங்கள் - பள்ளியில் நான் மிகுந்த பதட்டமான எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பையனாய் இருந்தேன். என் குணமே அப்படித் தான். என்னுடைய மாமாவிற்கும், என் சக பணியாளர்களுக்கும், என் குடும்பத்தினருக்கும், என்னுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எப்பேர்ப்பட்ட ஓர் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என் மூளைக் கலங்கியது போல் ஆகிவிட்டது. எனக்கு நேர்ந்தது ஒரு விபத்தாகவே இருந்திருந்தாலும், அதற்காக எந்தவொரு சலுகையும் எனக்கு அளிக்கப்படப்போவதில்லை என்பதை நன்கு அறிவேன். தேச நலனை பாதிக்கும் ராஜாங்க விஷயங்களில் விபத்துகளுக்கு ஏது இடம்? அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கு சரியாய் நினைவில் இல்லை. சில பேர் என்னை சூழ்ந்து கொண்டு என்னை சமாதானப் படுத்த முயற்சித்தது லேசாக நினைவிருக்கிறது. யாரோ ஒருவர் என்னை வாட்டர்லூ (Waterloo) ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். என் வீடு வரை அவர் என்னுடன் வருவதாக இருந்திருப்பார் போலும். நல்லவேளையாக அங்கே என் வீட்டின் அருகில் வசிக்கும் டாக்டர். ஃபெரியரை (Dr. Ferrier) பார்த்ததால், அவரிடம் என்னை ஒப்படைத்தார். ரயில் நிலையத்திலேயே ஒரு முறை மயங்கி விழுந்தேன் என்று நினைக்கிறன். வீட்டிற்கு வந்து சேருவதற்குள் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.

"என்னை அந்தக் கோலத்தில் நடுராத்திரியில் என் வீட்டினர் பார்த்தபோது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். டாக்டர். ஃபெரியருக்கு தெரிந்த அரைகுறை விஷயங்களை என் குடும்பத்தினரிடம் அவர் சொல்ல அது இன்னும் நிலைமையை மோசமாக்கியது. இந்த உடல்நலக்குறைவில் இருந்து நான் தேறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று எல்லோருக்கும் தெரிந்தபடியால், மருத்துவம் செய்ய வசதியாய் மேல் மாடியில் இருந்த என்னுடைய அறைக்கு என்னை அழைத்துச் செல்லாமல், இதோ ஜோசப்பினுடைய இந்த அறையிலிருந்து அவரை உடனடியாக வெளியேற்றிவிட்டு என்னை இங்கே தங்க வைத்தார்கள். அன்றிலிருந்து ஒன்பது வாரங்களாக நான் இங்கேயே கிடந்தேன், மிஸ்டர். ஹோம்ஸ், மூளைக் காய்ச்சலில் பிதற்றிக்கொண்டு. ஆன்னியுடைய பணிவிடையும் டாக்டரின் மருத்துவமும் இல்லையென்றால் இப்போது நான் இங்கே அமர்ந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். நாள் முழுவதும் என்னை ஆன்னி கவனித்துக்கொள்ள, இரவு என்னைப் பார்த்துக்கொள்ள ஒரு செவிலியர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். இந்த மூன்று நாட்களாகத் தான் என்  நினைவுகள் மெல்ல மெல்லத் திரும்புகின்றன. மிஸ்டர். ஃபோர்ப்ஸுக்கு தந்தி அனுப்பி கேஸில் ஏதும் முன்னேற்றம் இருக்கிறதா என்று கேட்டேன். எல்லா முயற்சிகளும் எடுத்தும் ஒரு தடயம் கூடக் கிடைக்கவில்லை என்று அவர் கூறிவிட்டார். மிஸ்டர். டான்ஜியையும் அவரது மனைவியையும் தீர விசாரித்தும் அவர்களிடம் இருந்தும் எந்தத் தகவல்களும் பெற இயலவில்லை.  

போலீசாரின் சந்தேகம் அடுத்து என் சக ஊழியர் சார்ல்ஸ் கோரோட்டின் மீது விழுந்தது. அன்று அவர் சற்றுத் தாமதமாகப் பணி முடித்துக் கிளம்பினார் அல்லவா, அதனால். அவர் அன்று ஆபிசில் இருந்ததும் அவருடைய பிரெஞ்சுப் பெயரும் தான் அவர் மீது சந்தேகம் எழ முக்கியக் காரணங்கள். ஆனால் அவருடைய வம்சம் ஹுயூகோநாட் (Huguenot) வழியைச் சேர்ந்தது. உங்களுக்கேத் தெரியும் அவர்கள் இங்கிலாந்துக்கு நம்மைப் போலவே விசுவாசம் மிக்கவர்கள் என்று. அவரை இதில் சம்பந்தப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லாததால் அந்த வழியும் அடைபட்டுவிட்டது. இப்போது எனக்கு மீதம் இருப்பது நீங்கள் மட்டுமே, மிஸ்டர். ஹோம்ஸ். நீங்களும் என்னைக்  கைவிட்டுவிட்டால் என் வாழ்வை முழு நாசத்திலிருந்து மீட்க வேறு யாரும் இல்லை".

பெர்சி பெல்ப்ஸ் சோபாவில் சாய்ந்து அமர்ந்தான், அவ்வளவு நேரம் பேசியதில் களைப்படைந்தவனாக. ஆன்னி அவனுக்கு எதோ மருந்தை ஊற்றிக் கொடுத்தாள் குடிப்பதற்கு. கண் மூடி அமர்ந்திருந்தார் ஹோம்ஸ். அவரைப் பார்ப்பவர்கள் அவர் எதையும் சிரத்தையோடு செவிமடுக்கவில்லை என்றே நினைப்பார்கள். ஆனால் அவர் ஒரு வார்த்தையையும் விடாமல் சொல்லப்பட்டத் தகவல்கள் அனைத்தையும் உள்வாங்கி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.

"நான் மேலும் கேள்விகள் கேட்பதற்கு தேவையே இல்லாமல் எல்லாவற்றையும் மிக விரிவாகத் தெளிவாக விவரித்துவிட்டீர்கள்", என்றார் ஹோம்ஸ் மௌனம் கலைந்து. "ஒன்றே ஒன்றை மட்டும் கூறுங்கள் - நீங்கள் செய்யப்போகும் இந்த முக்கியமான வேலையைப் பற்றி யாரிடமேனும் கூறினீர்களா?"

"இல்லை".

"மிஸ். ஹாரிசனிடம்?"

"இல்லை. நான் தான் என்னிடம் வேலையைக் கொடுத்ததற்கும் அதை நான் ஆரம்பிப்பதற்கும் இடையில் வீட்டிற்கு வரவே இல்லையே".

"உங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு யாரேனுமோ உங்களைப் பார்க்க வந்தார்களா?"

"இல்லை".

"உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் அலுவலகத்தின் இடங்களும் வழிகளும் தெரியுமா?"

"ஓ! தெரியுமே! எல்லாருக்கும் அலுவலகத்தைச் சுற்றிக் காட்டியிருக்கிறேன்".

"நீங்கள் ஒப்பந்தத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லையெனில் இந்தத் தகவல்கள் எல்லாம் தேவையற்றவை".

"நான் வாயேத் திறக்கவில்லை".

"அலுவலக உதவியாளரைப் பற்றி ஏதேனும் தெரியுமா?"

"அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது".

"எந்த ரெஜிமென்ட்?"

"கோல்டுஸ்ட்ரீம் கார்ட்ஸ் (Coldstream Guards) என்று கேள்விப்பட்டிருக்கிறேன்".

"நன்றி. ஃபோர்ப்ஸிடமிருந்து வேண்டுமானத் தகவல்களை பெறமுடியும் என்று நினைக்கிறேன். தகவல்கள் அனைத்தையும் திரட்டுவதில் போலீஸ்காரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அந்தத் தகவல்களை எப்படி உபயோகிப்பது என்பதில் தான் கொஞ்சம் பின்தங்குகிறார்கள்", என்ற ஹோம்ஸ் திடீரென்று, "இந்த ரோஜா தான் எத்தனை அற்புதமானது!" என்றார்.

"இந்த ரோஜா தான் எத்தனை அற்புதமானது!" (Illustration by Sidney Paget in The Strand Magazine)

பெர்சி படுத்திருந்த சோபாவைத் தாண்டிச் சென்று ஜன்னல் வழியேத் தெரிந்த ரோஜா செடியின் பூவை ஆர்வமாய்ப் பார்த்தார். இயற்கையை ரசிக்கும் ஹோம்ஸை இதுவரை நான் பார்ததில்லையாதலால் எனக்கு ஹோம்ஸின் இந்த செய்கை புதிதாய் இருந்தது.

"மதங்களுக்கும் சமயங்களுக்கும் பகுத்தறிந்து முடிவு உணரும் தன்மை தேவைப்படுவதை போல் வேறு எதற்கும் தேவைப்படுவதில்லை", என்றார் ஜன்னலின் கதவுகளில் சாய்ந்து கொண்டு. "பகுத்தறிவாளர் ஒருவரால் அதை ஒரு துல்லியமான அறிவியலாகக் கட்டமைக்க முடியும். கடவுளின் கருணைக்குப் பூக்களே ஆகச் சிறந்த சாட்சி. மற்ற எல்லாம் - நமது ஆற்றல்கள், நமது ஆசைகள், நமது உணவு - அனைத்தும் நம் இருத்தலுக்குத் தேவையானவை. ஆனால் இந்த ரோஜா இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதனுடைய மணமும் நிறமும் வாழ்க்கையின் அலங்காரம், வாழ்க்கைக்கானத் தேவை அல்ல. ஆகையால்தான் சொல்கிறேன், பூக்களிடமிருந்து நாம் நம்பிக்கைக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது".

கையில் ரோஜாவுடன் சம்பந்தமில்லாமல் எதோ நினைவில் ஆழ்ந்தவராய் பேசும் ஹோம்ஸை பெர்சியும் ஆன்னியும் ஏமாற்றத்துடன் பார்த்தார்கள்.

"இந்த மர்மத்தைத் துப்பு துலக்க முடியும் என்று நம்புகிறீர்களா, மிஸ்டர். ஹோம்ஸ்?" என்று ஆன்னி கேட்டாள், குரலில் லேசாக எட்டிப் பார்த்த எரிச்சலுடன்.

"ஓ! மர்மம்?" என்றார் சுயநிலைக்குத் திரும்பியவராய். "இந்தக் கேஸ் நிரம்பவும் கடினமான, குழப்பமான ஒன்று தான். ஆனாலும் என் முறைப்படி நான் சில விசாரணைகள் மேற்கொள்கிறேன். புதிதாய் தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்", என்றார்.

"ஏதேனும் தடயம் உங்களுக்குப் புலப்படுகிறதா?"

"நீங்கள் எனக்கு ஏழு தடயங்கள் கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவைகளை சோதித்துப் பார்க்காமல் அவைகளைப் பற்றி நான் முடிவேதும் கூறமுடியாது".

"யாரையேனும் சந்தேகிக்கிறீர்களா?"

"என்னைத்தான் சந்தேகிக்கிறேன்".

"என்ன!"

"அவசரப்பட்டு முடிவுகளுக்கு வருகிறேனோ என்று".

"அப்படியெனில் நீங்கள் லண்டனுக்குத் திரும்பி உங்கள் முடிவுகளை சோதியுங்கள்", என்றாள் ஆன்னி.

"மிகச் சிறந்த அறிவுரை, மிஸ். ஹாரிசன்", என்றார் ஹோம்ஸ். "மிஸ். ஹாரிசன் சொன்னதைத் தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை, வாட்சன்", என்றவர் பெல்ப்ஸைப் பார்த்து, "பொய்யான நம்பிக்கைகள் எவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டாம், மிஸ்டர். பெல்ப்ஸ். இந்தப் பிரச்னை மிகவும் சிக்கலான ஒன்று", என்றார்.

"உங்களை மறுமுறை பார்க்கும் வரை நான் கலக்கத்திலேயே இருப்பேன், மிஸ்டர். ஹோம்ஸ்".

"அப்படியெனில் நான் நாளை இதே ரயிலில் இங்கே வந்து உங்களைப் பார்க்கிறேன், சொல்வதற்கு எதுவும் இல்லையெனினும்".

"மிக மிக நன்றி, மிஸ்டர். ஹோம்ஸ். நீங்கள் இதில் சம்பந்தப்பட்டுவிட்டீர்கள் என்ற நினைப்பே எனக்குப் புதிய ஊக்கத்தைத் தருகிறது. ஹாங் ... இன்னொரு விஷயம். லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட்டிடமிருந்துக் கடிதம் ஒன்று வந்துள்ளது", என்றான் பெர்சி.

"நிரம்பக் கடினமான வார்த்தைகளை அவர் உபயோகிக்கவில்லை. என்னுடைய உடல்நிலை அவரை அப்படிச் செய்வதிலிருந்துத் தடுத்திருக்கும். இது எவ்வளவு முக்கியமான சமாச்சாரம் என்பதை மறுபடி மறுபடி வலியுறுத்தியிருந்தார். என் உடல்நிலைத் தேறி நடந்த தவறை சரி செய்ய நான் முயற்சி எடுக்கும் வரை என் எதிர்காலம் சம்பந்தமான, என்னை வேலையிலிருந்து அனுப்புவதைத் தான் குறிப்பிடுகிறார், எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று எழுதியுள்ளார்".

"பரவாயில்லை. நியாயமான வார்தைகளாகத்தான் எழுதியுள்ளார்", என்ற ஹோம்ஸ் என்னிடம் திரும்பி, "வாரும், வாட்சன். லண்டனில் நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன", என்றுக் கூற, நாங்கள் அங்கிருந்துக் கிளம்பினோம்.  

தொடரும் …                               


Write a comment ...